Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக 2025 ஆம் வருடத்தில் கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு

Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக 2025 ஆம் வருடத்தில் கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வானது இன்றைய தினம் 01.01.2025 காலை 08.30 மணியளவில் மாநகர ஆணையாளர் திரு.ச.கிருஷ்ணேந்திரன் தலமையில் மாநகரசபை அலுவலக முன்றலில் நடைபெற்றது.

பண்ணை மீன்சந்தை திறப்பு விழா

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் பண்ணை மீன் சந்தைக் கட்டடமானது உள்ளுர் அபிவிருத்தி மேம்பாட்டுத்திட்டம் (LDSP) மற்றும் சபை நிதியில் கீழ் ரூபா 52.5 மில்லியன் செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட்டு இன்றைய தினம் மாநகர ஆணையாளர் திரு.சந்திரன் கிருஷ்ணேந்திரன் தலைமையில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு. நாகலிங்கம் வேதநாயகன் அவர்களினால் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாநகரசபை – நிகழ்ச்சித்திட்ட வரவு செலவுத்திட்டம் (வரைவு) -2025


Works Details (1)

Budget Expenditure Estimate 2025 (1)

Budget Revenue Estimate 2025 (1)

யாழ்ப்பாண மாநகரசபையின் அனர்த்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள்

1.மாநகர எல்லைக்குட்பட்ட 25 கிலோமீற்றர் நீளமான 48 பிரதான வடிகால்களும் 30 கிலோமீற்றர் நீளமான 26 சிறிய வடிகால்களும் இவ்வருடம் ஒக்ரோபர் மாதம் முதல் நாளாந்தம் ஒழுங்கமைக்கப்பட்ட வேலை அட்டவணைக்கு ஏற்ப துப்பரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2024.11.22 ஆம் திகதி இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தின் போது யாழ்ப்பாணம் மாநகர சபையினால் ஒழுங்கமைக்கப்பட்ட விசேட குழுவினரினால் நாளொன்றிற்கு இரு தடவைகள் வீதம் கடலுடன் இணையும் பெரிய வெள்ள வாய்க்கால்கள் – 18, கடலுடன் இணையும் சிறிய வெள்ள வாய்க்கால்கள் – 17, ஏனைய பெரிய வெள்ள வாய்க்கால்கள் – 48, ஏனைய சிறிய வெள்ள வாய்க்கால்கள் – 26 துப்பரவு செய்யப்பட்டது.
இதற்கு மேலதிகமாக நீரோட்டம் தடைப்பட்டிருந்த வடிகால்களின் கழிவுப்பொருட்கள் 6 மணித்தியாலத்திற்கு ஒரு தடவை சுழற்சி முறையில் மாநகர சபை ஆளணியினரால் அகற்றப்பட்டது.


2.வடிகால்கள் வசதியற்ற வெள்ள நீரோட்டத்தினை தடைசெய்யப்பட்டிருந்த 08 இடங்களுக்கு தற்காலிக வடிகால்கள் வெட்டி நீரோட்டத்திற்கு வழியமைக்கப்பட்டது.


3.இடையூறுகளாக காணப்பட்ட மரங்கள் வெட்டியகற்றப்பட்டது.
• பொதுமக்கள் போக்குவரத்திற்கு பாதிப்பாக வீதிக்கு குறுக்காக விழுந்த பாரிய மரங்கள் உரிய முறையில் மாநகர சபை ஆளணியினரால் வெட்டி அகற்றப்பட்டது.
• வடிகால்களின் நீரோட்டத்தினை தடையாக காணப்பட்ட அனைத்து மரங்கள் மற்றும் மரக்கிளைகள் வெட்டியகற்றப்பட்டது.


4.பொது மக்கள் நலனோன்பு செயற்திட்டங்கள்;
• வெள்ள நீர் உட்புகுந்த பிரதேசத்தில் காணப்படுகின்ற பொது மக்களை பாதுகாப்பாக வெளியேறுவதற்கான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
• பொது மக்களுக்கான உணவுப் பொருட்கள் மற்றும் அவர்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு சென்று கொடுப்பதற்கான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
• இடைத்தங்கல் முகாம்களில் காணப்படுகின்ற பொது மக்களுக்கு குடிநீர், கழிவகற்றல் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
• 09 இடைத்தங்கல் முகாம்களில் காணப்படுகின்ற 263 குடும்பங்களைச் சேர்ந்த 803 பொது மக்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் மருத்துவ முகாம்கள் நடாத்தப்பட்டது.


யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் அனர்த்த வேளைகளில் ஏற்படும் அசௌகரியங்கள் பற்றிய தொடர்புகளுக்கு………

World Clean-up Day – 28.09.2024

உலக தூய்மைப்படுத்தும் தினமான 28.09.2024 ஆம் திகதி சுற்றுச்சூழலினை தூய்மைப்படுத்தும் நோக்கமாக கொண்டு பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகளினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காக இன்றைய தினம் சிரமதானம் மற்றும் விழிப்புணர்வு செயற்பாடுகள் யாழ் மாநகரசபை, லயன்ஸ் கழகம், றொட்றிக் கழகம், Save a Life ஆகியவை ஒன்றிணைந்து மாநகரசபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களான பண்ணை சுற்றுவட்டம், நாவாந்துறை கடற்கரையோரம், செம்மணி வீதி, வேம்படிச் சந்தி ஆஸ்பத்திரி வீதி , கே.கே.எஸ் வீதி, ஸ்ரான்லி வீதி போன்ற இடங்களில் முன்னெடுக்கப்பட்டன.

Mankiwwa நிகழ்நிலை செயலியினை அறிமுகப்படுத்தல்

 

யாழ்ப்பாண மாநகரசபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் பொதுமக்கள் Mankiwwaநிகழ்நிலை செயலி ஊடாக முறைப்பாடுகளினை தெரிவிக்கும் ஆரம்ப பரீட்சார்த நிகழ்வு எதிர்வரும் 30.09.2024 ஆம் திகதி மாலை 02.00 மணிக்கு ஐங்கரன் சனசமூக நிலையம் வண்ணார்பண்ணையயில் நடைபெறவுள்ளது.
இச் செயலி மூலம் 1,2,9 ஆகிய மூன்று வட்டாரங்களை உள்ளடக்கிய வண்ணார்பண்ணை பிரட்டு அலுவலகத்திற்குட்பட்ட J/97,J/98,J/99,J/100,J/101,J/102 மற்றும்J/123 கிராம சேவையாளர் பிரிவினுள் வசிக்கும் பொதுமக்கள் மட்டும் முறைப்பாடுகளினை தெரிவித்துக் கொள்ளலாம்.
எதிர்வரும் காலங்களில் மாநகரசபைக்கு உட்பட்ட ஏனைய வட்டாரங்களிலும் இச் செயலியை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பொதுமக்கள் பின்வரும் முறைப்பாடுகளினை குறித்த செயலி மூலம் தெரிவிக்க முடியும்.
• டெங்கு ஆபத்தான பகுதிகள்
• தடைப்பட்ட வடிகால்கள்
• பழுதடைந்த வீதி விளக்குகள்
• சேதமடைந்த வீதிகள்
• குப்பைக் குவியல்கள்
• அபாயகரமான முறிவடைந்த மரங்கள்
• சேதமடைந்த கழிவு நீர்க் குழாய்கள்
• அனுமதியற்ற கட்டுமானங்கள்

நல்லைக்குமரன் 32வது புத்தக வெளியீடு- 2024

 

யாழ் மாநகர சபையின் சைவ சமய விவகாரக்குழுவின் 32வது நல்லைக்குமரன் மலர் வெளியீடானது 15.08.2024ஆம் திகதியன்று காலை 09.00மணிக்கு மாநகர ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் தலைமையில் நல்லை திருஞானசம்பந்த ஆதீன கலாமண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசா அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.அ.சிவபாலசுந்தரன் (ஓய்வு நிலை அரச அதிபர் யாழ்ப்பாணம்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். 2024ம் ஆண்டிற்கான யாழ் விருதினை யாழ் போதனா வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணர் ந.சரவணபவா அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் பிரதம விருந்தினரால் மலர் வெளியிடப்பட்டு தெல்லிப்பளை துர்க்கா தேவஸ்தானம் முதல் பிரதியினைப் பெற்றுக் கொண்டது.

சர்வதேச பூச்சிய கழிவுதினத்தை முன்னிட்டு மாநகரசபையினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

 

எதிர்வரும் 30.03.2024ம் திகதி சனிக்கிழமை சர்வதேச பூச்சிய கழிவு தினத்தை முன்னிட்டு யாழ் மாநகர ஆணையாளர் அவர்களினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. இதனடிப்படையில் கழிவுகளை தரம் பிரித்து அகற்றுவது  மற்றும் மாநகரத்தை தூய்மையாக பேணுவதன் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையிலும் நாளைய தினம் (30.03.2024 )காலை 7.00 மணிக்கு ஆரியகுளம் சந்தி மற்றும் மடத்தடி சந்தி ஆகிய இடங்களில் இருந்து மாநகர ஆணையாளர் அவர்களின் தலைமையில் ‘ஆரோக்கிய யாழ் பவனியும் தூய்மையாக்கல் பணியும்” எனும் தொனிப்பொருளில் நடைபவனி ஆரம்பித்து பண்ணை சுற்றுவட்டத்தில் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தின்போது வீதியோரங்களில் உள்ள உக்கும் மற்றும் உக்காத கழிவுகள் அகற்றப்படுவதுடன் மாநகர வரியிறுப்பாளர்கள் தங்களால் அகற்றப்படும் உக்கும் மற்றும் உக்காத கழிவுகளை மாநகரசபையின் கழிவகற்றல் உழவு இயந்திரங்களுக்கு வழங்க முடியும். இவ்வேலைத்திட்டத்தில் யாழ்நகரப்பாடசாலைகளில் சிரமதான நடவடிக்கைகளை மேற்கொண்டு மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளினால் சிரமதானம் செய்து அகற்றப்படும் கழிவுகளை உடனடியாக மாநகரசபையின் கழிவகற்றல் வாகனங்கள் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இவ்வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் மாநகரசபையின் இருபத்தேழு வட்டாரங்களை உள்ளடக்கி வெவ்வேறு இடங்களில்  ஏற்கனவே அமைக்கப்பட்ட ஒன்பது கழிவகற்றல் பிரட்டு மையங்களில் எதிர்வரும் வாரங்களில் மாற்றமொன்றை மேற்கொண்டு அனைத்து பிரட்டு மையங்களும் இருபத்து நான்கு மணிநேரமும் இயங்கி பொதுமக்கள் தங்கள் கழிவுகளை தரம் பிரித்து வழங்குவதற்கும் கழிவகற்றல் வாகனங்கள் அனைத்து வட்டாரங்களிலும் நேரசூசி முறைமையில் கழிவகற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அமுல்படுத்தப்பட்டு கழிவகற்றல் செயற்பாடுகள் மேலும் சிறப்பாக  இடம்பெறும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகரசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் கௌரவ ஆளுநர் அவர்களினால் அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணம் மாநகரசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் 01.03.2024ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களால் பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

மக்கள் பணியில் சிறப்பாக சேவையாற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் உத்தியோகபூர்வ இணையத்தளமுடாக தகவல் தொழில்நுட்ப உலகத்திற்குள் பிரவேசித்து மக்கள் பணிகளை மேற்கொள்ள முன்னெடுத்துள்ள முயற்சி பாராட்டத்தக்க விடயமாகும் எனக் குறிப்பிட்ட கௌரவ ஆளுநர் அவர்கள் தற்போதைய இளம் சமுதாயத்தினர் அனைத்து விடயங்களையும் தொழில்நுட்பரீதியாக கையாள்வதால் எமது சேவைகளையும் அவர்களுக்கு ஏற்றவகையில் மிக வேகமாக இவ்வாறான இணையத்தளங்களினூடாக வழங்கமுடியும் என தெரிவித்தார்.

பொதுமக்கள் தங்களுக்கான சேவைகளை இணையத்தினூடாக பெற்றுக் கொள்வதற்கு தேவையான வசதிகளையும், வரி உள்ளிட்ட கட்டணங்களையும் இணையத்தளத்தினூடாக செலுத்துவதற்கான வசதிகளையம் மேம்படுத்த வேண்டுமென வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்கள் இதன்போது அதிகாரிகளுக்கு தெரிவித்தார்

இந்நிகழ்வில் பிரதம செயலாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளுராட்சி ஆணையாளர், இறைவரித்திணைக்களத்தின் மாகாண ஆணையாளர், யாழ் மாநகரசபை ஆணையாளர், உள்ளுராட்சி உதவி ஆணையாளர்கள், ஆசிய மன்றத்தின் பிரதிநிதி, சபையின் செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்ததோடு இணையத்தளத்தை வடிவமைத்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்து பிரதம செயலாளர் அவர்களால் பராட்டுப்பத்திரமும் வழங்கப்பட்டது.