சர்வதேச பூச்சிய கழிவுதினத்தை முன்னிட்டு மாநகரசபையினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

 

எதிர்வரும் 30.03.2024ம் திகதி சனிக்கிழமை சர்வதேச பூச்சிய கழிவு தினத்தை முன்னிட்டு யாழ் மாநகர ஆணையாளர் அவர்களினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. இதனடிப்படையில் கழிவுகளை தரம் பிரித்து அகற்றுவது  மற்றும் மாநகரத்தை தூய்மையாக பேணுவதன் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையிலும் நாளைய தினம் (30.03.2024 )காலை 7.00 மணிக்கு ஆரியகுளம் சந்தி மற்றும் மடத்தடி சந்தி ஆகிய இடங்களில் இருந்து மாநகர ஆணையாளர் அவர்களின் தலைமையில் ‘ஆரோக்கிய யாழ் பவனியும் தூய்மையாக்கல் பணியும்” எனும் தொனிப்பொருளில் நடைபவனி ஆரம்பித்து பண்ணை சுற்றுவட்டத்தில் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தின்போது வீதியோரங்களில் உள்ள உக்கும் மற்றும் உக்காத கழிவுகள் அகற்றப்படுவதுடன் மாநகர வரியிறுப்பாளர்கள் தங்களால் அகற்றப்படும் உக்கும் மற்றும் உக்காத கழிவுகளை மாநகரசபையின் கழிவகற்றல் உழவு இயந்திரங்களுக்கு வழங்க முடியும். இவ்வேலைத்திட்டத்தில் யாழ்நகரப்பாடசாலைகளில் சிரமதான நடவடிக்கைகளை மேற்கொண்டு மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளினால் சிரமதானம் செய்து அகற்றப்படும் கழிவுகளை உடனடியாக மாநகரசபையின் கழிவகற்றல் வாகனங்கள் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இவ்வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் மாநகரசபையின் இருபத்தேழு வட்டாரங்களை உள்ளடக்கி வெவ்வேறு இடங்களில்  ஏற்கனவே அமைக்கப்பட்ட ஒன்பது கழிவகற்றல் பிரட்டு மையங்களில் எதிர்வரும் வாரங்களில் மாற்றமொன்றை மேற்கொண்டு அனைத்து பிரட்டு மையங்களும் இருபத்து நான்கு மணிநேரமும் இயங்கி பொதுமக்கள் தங்கள் கழிவுகளை தரம் பிரித்து வழங்குவதற்கும் கழிவகற்றல் வாகனங்கள் அனைத்து வட்டாரங்களிலும் நேரசூசி முறைமையில் கழிவகற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அமுல்படுத்தப்பட்டு கழிவகற்றல் செயற்பாடுகள் மேலும் சிறப்பாக  இடம்பெறும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகரசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் கௌரவ ஆளுநர் அவர்களினால் அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணம் மாநகரசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் 01.03.2024ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களால் பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

மக்கள் பணியில் சிறப்பாக சேவையாற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் உத்தியோகபூர்வ இணையத்தளமுடாக தகவல் தொழில்நுட்ப உலகத்திற்குள் பிரவேசித்து மக்கள் பணிகளை மேற்கொள்ள முன்னெடுத்துள்ள முயற்சி பாராட்டத்தக்க விடயமாகும் எனக் குறிப்பிட்ட கௌரவ ஆளுநர் அவர்கள் தற்போதைய இளம் சமுதாயத்தினர் அனைத்து விடயங்களையும் தொழில்நுட்பரீதியாக கையாள்வதால் எமது சேவைகளையும் அவர்களுக்கு ஏற்றவகையில் மிக வேகமாக இவ்வாறான இணையத்தளங்களினூடாக வழங்கமுடியும் என தெரிவித்தார்.

பொதுமக்கள் தங்களுக்கான சேவைகளை இணையத்தினூடாக பெற்றுக் கொள்வதற்கு தேவையான வசதிகளையும், வரி உள்ளிட்ட கட்டணங்களையும் இணையத்தளத்தினூடாக செலுத்துவதற்கான வசதிகளையம் மேம்படுத்த வேண்டுமென வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்கள் இதன்போது அதிகாரிகளுக்கு தெரிவித்தார்

இந்நிகழ்வில் பிரதம செயலாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளுராட்சி ஆணையாளர், இறைவரித்திணைக்களத்தின் மாகாண ஆணையாளர், யாழ் மாநகரசபை ஆணையாளர், உள்ளுராட்சி உதவி ஆணையாளர்கள், ஆசிய மன்றத்தின் பிரதிநிதி, சபையின் செயலாளர்கள், தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்ததோடு இணையத்தளத்தை வடிவமைத்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்து பிரதம செயலாளர் அவர்களால் பராட்டுப்பத்திரமும் வழங்கப்பட்டது.