மாநகரசபை வரலாறு

 

15ம் நூற்றாண்டு காலத்தில் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சங்கிலி மன்னன் காலத்திலிருந்தே இலங்கையின் முக்கிய நகரமாக யாழ் நகரப்பகுதி விளங்கியுள்ளது. ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 1861 ஆம் ஆண்டில் வீதிக் குழு (Road Committee ) என அழைக்கப்பட்ட உள்ளுராட்சிச் சபையைப் போன்றதொரு அமைப்பு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது. பின்னர், 1898 ஆம்மற்றும் 1906 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட 13 ஆம் இலக்கச் சட்டவிதிகளுக்கு அமைய முதலாவது உள்ளூராட்சிச் சபை (Local Board) உருவானது. 1921 ஆம் ஆண்டில் இது, நகரப்பகுதிச் சபை (Urban District Council) ஆகவும், பின்னர் 1940 இல், நகரசபையாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 1947 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்கம் கொண்ட மாநகரசபைகள் கட்டளைச்சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 1949.01.01 அன்று ஸ்தாபிக்கப்பட்டதே யாழ் மாநகர சபையாகும். மேற்கு ஐரோப்பிய ஆட்சிக்காலத்தில் யாழ் நகரத்தினை நிர்வகிப்பதற்கான நடவடிக்கைகளுக்கான நகர மண்டபக் கட்டடம் , தற்போதைய துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகில் அமைந்திருந்தது. 1983ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர் காரணமாக குறித்த கட்டடம்; முற்றுமுழுதாக அழிந்துவிட்டது. அதன் பின்னர் குறித்த மாநகரசபை கட்டடம் நல்லூர்ப் பகுதியில் தற்காலிகமாக அமைந்துள்ளது. தற்போது அதே இடத்தில் புதிதாக நகரமண்டபம் அமைப்பதற்காக 07.09.2019 அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் நடைபெற்றுவருகின்றது.