பல வேடிக்கை மனிதரைப் போலே -நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?தமிழின் இனிமையை அதன் உன்னதத்தை உலகுக்கு எடுத்துக்காட்டிய முன்னோடிகள் இருபெரும் புலவர்களின் திருவுருவச் சிலைகள் யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளன. யாழில் முக்கிய நெடுஞ்சாலையான யாழ் – மானிப்பாய் – காரைநகர் வீதியில் யாழ்நகரின் நுழைவாயிலில் யாழ்.மாநகர சபையின் உறுதுணையுடன் அகில இலங்கை சைவமகா சபையினரால் நிறுவப்பெற்ற வடக்கையும் கிழக்கையும் ஆன்மீகத்தால், முத்தமிழால்,கல்விப் பணிகளால் இணைத்த ஈழம் தந்த சைவத்தமிழ்ப் பெரியார் சுவாமி விபுலானந்த அடிகளார் திருவுருவச் சிலையானது கிழக்கின் முதன்மை ஆதீனமான தென் கயிலை ஆதீனம் அகத்தியர் அடிகளார் மற்றும் மாநகர முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதே போன்று உலகின் முதல் தமிழ் பேராசிரியரான விபுலானந்தரால் தமிழ் உலகின் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்ட புரட்சி புதுமை கவிகளிற்கு சொந்தக்காரரான மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் திருவுருவச் சிலையினை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு.சிறிசற்குணராசா மற்றும் யாழ்.மாநகர சபையின் மராமத்துக்குழுத் தலைவர் சட்டத்தரணி றெமிடியஸ் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் யாழ்.மாநகர சபை கௌரவ உறுப்பினர்கள், அகில இலங்கை சைவமாகா சபையினர், மாநகர ஆணையாளர் திரு.இ.த. ஜெயசீலன், மாநகர சபை செயலாளர், பொறியிலாளர் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர். மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையினரால் நிறுவப் பெற்ற முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் சிலையை சிவசிற்ப வாரிதி உ.கயேந்திரன் அவர்களும், மாநகர சபையினரால் நிறுவப் பெற்ற மகாகவி பாரதியாரின் சிலையை புருஷோத்தமன் அவர்களும் வடிவமைத்திருந்தனர்.
முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளார் சிலை, மகாகவி பாரதியார் சிலை திறப்பு விழா
13
Oct