தற்போது யாழ்.நகரப் பகுதியில் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ள போதைவஸ்து பாவனை மற்றும் சமூக பிறழ்வான சம்பவங்கள் தொடர்பில் யாழ்.மாநகர முதல்வர் கௌரவ வி.மணிவண்ணன் கரிசனை செலுத்தியுள்ளர்.போதைவஸ்து பாவனை மற்றும் சமூக பிறழ்வான சம்பவங்கள் தொடர்பில் பல வேறு மட்டங்களில் அதன் பிரதிபலிப்பு உணரப்பட்ட நிலையில் பொலிசாருடன் இணைந்து இது தொடர்பில் பலவேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கௌரவ நீதிபதிகளும் யாழ்.மாநகர சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.அதன் அடிப்படையில் சமூகப் பிறழ்வான நடவடிக்கைகளுக்கு ஏற்றவகையில் அப்பகுதிகளை தூய்மைப்படுத்தல், பொலிசாருடன் யாழ்.மாநகர சபையும் இணைந்து திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளல், சமூகபிறழ்வான நடத்தையில் ஈடுபடுவர்களை பொலிசார் மூலம் சட்டநடவடிக்கைகளுக்கு உட்படுத்தல், அவர்களின் பெற்றோருக்கு அறிவித்தல், சமுதாயத்தில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பில் மாநகர முதல்வர் கரிசனை செலுத்தியுள்ளார்.
இந் நிலையில் யாழ்.மாநகர முதல்வர் இன்று சமூக பிறழ்வான நடவடிக்கைகள் இடம் பெறுகின்ற முக்கிய பகுதியாக கருதப்படுகின்ற கோட்டைப்பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு விஜயம் செய்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் யாழ்.கோட்டை சுற்றாடல் பகுதி காணப்படுகின்ற நிலையில் அதனை தூய்மைப்படுத்துவதற்கான அனுமதி அவர்களிடம் பெறப்பட்ட நிலையில் யாழ்.கோட்டை சுற்றாடல் பகுதி மிக விரைவில் தூய்மைப்படுத்தப்பட்டு கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படவுள்ளது.அத்துடன் இது போன்ற சமூக பிறழ்வான நடவடிக்கைகள் நடைபெறும் இடங்கள் அனைத்திலும் கண்காணிப்பு நடிவக்கைகளை சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் இணைந்து யாழ்.மாநகர சபை முன்னேடுக்கவுள்ளது.எமது மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தினை சீரமைக்க வேண்டிய பொறுப்பு எம் ஒருவருக்குமானது. அதன் அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.